சமீபகாலமாக அதிமுகவின் இரு பெரும் தலைவர்களான பன்னீர் செலவத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் தனித்தனியே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு திங்கள்கிழமை அன்று தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களின் பொருளாதார கஷ்டங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அத்தகைய நபர்களுக்கு கூடுதல் சலுகைகள் அதாவது பணப்பலன்கள் வழங்குமாறு பன்னீர்செல்வம், பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில், அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பூஞ்சை எதிர்ப்பு மருந்தான லிபோசோமால் ஆம்போடெரிசின் பி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இப்படி ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினிடம், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு அதற்கான சலுகைகளை கிடைக்க செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேபோல், முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை கே.செல்வராஜ், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சித்த மருத்துவர்களை, சித்த மருந்துகளை விநியோகிக்க பயன்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஆனந்தையா என்ற ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த மூலிகை கலவையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளதைக் குறிப்பிட்டு சித்த மருத்துவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil