கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கோலார் தொகுதி உள்பட 3 தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர்கள் இன்று (ஏப்ரல் 20) அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ.கவும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் சிலர் கட்சியில் இருந்து விலகினர். ஆதரவாளர்கள் போராட்டம், அதிருப்தி என பா.ஜ.கவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அ.தி.மு.க சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அ.தி.மு.க சார்பில் கர்நாடகாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி நகர் பகுதியில் டி. அன்பரன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அன்பரன் கர்நாடக மாநில அ.தி.மு.க அவைத் தலைவராக உள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கர்நாடகாவில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும், கோலார் தங்க வயல் பகுதியில் அனந்த ராஜ் என்பவரும், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலிருந்து அ.தி.மு.க கட்சியும், நிர்வாகிகளும் அங்கு உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“