அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பதவி மோதலில் கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மையான ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் 11-ந் தேதி நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறி ஒ.பி.எஸ் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ளது.
இதனிடையே அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் உள்ளிட்ட அவரின் ஆதரவாளிகள் பலரையும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கினார் ஆனால் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி ஒபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உள்ள பெரும்பாலானவர்களை நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டது.
இவர்கள் இருவரும் மாறி மாறி வெளியிட்ட இந்த அறிவிப்பு அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஒபிஎஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று தொண்டர்கள் காத்திருக்கின்றனர் இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இன்று நடைபெற்ற விசாரணையின் போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது நடவடிக்கையை கீழ்த்தனமானது என்று விமர்சித்துள்ளார். இதனால் அவரை இந்த வழக்கில் இருந்து மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியிடம் ஒ.பி.எஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. மேலும் நீதிபதியை மாற்றும் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞரும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீதிபதியை மாற்றும் ஒபிஎஸ் தரப்பின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதித்துறையை கலங்கப்படுத்தும் கீழ்த்தனமாக செயல் இது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதே சமயம் நீதிபதியை மாற்ற ஒபிஎஸ் தரப்பினர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை மதியம் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் தலைமை நீதிபதிக்கு ஒபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”