அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இ.பி.எஸ் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்கூ செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில், இரு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவாக அமைந்தது.
இதனால், ஓ.பி.எஸ் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் குறித்த தீர்ப்பு தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது தவறு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான்தான் அதை நடத்தி இருக்க முடியும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானவை. எனவே, பொதுக்குழுவை அங்கீகரித்ததும், எடுத்த தீர்மானங்களை அங்கீகரித்ததும் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”