துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக, நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தலைவராகவும் மேலும், 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் அவசரகதியில் ஓ.ராஜாவும், 17 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். எனவே இந்த நியமனம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக் குழுவும் செயல்பட இடைக்கால தடை விதித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஆவின் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், ஓ.ராஜா மற்றும் 17 பேர் நியமனம் செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.