அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவை புரட்சித் தலைவரும், அம்மாவும் கட்டிக் காத்து வளர்த்தார்கள். ஆகையால் இந்தக் கட்சியில் தொண்டர்களும் தங்களை பெருமையாக கருதுகிறார்கள்.
அம்மா (ஜெ.ஜெயலலிதா) சொன்னது போல் அதிமுக அடுத்த 100 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படும். மேலும், நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 30 ஆண்டுகள் கட்டுக்கோப்பாக ஆண்ட பெருமையும் புரட்சித் தலைவருக்கும் புரட்சித் தலைவிக்குமே சேரும். ஏனெனில் அப்படியொரு வேறு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை.
இதற்கெல்லாம் காரணம் அவர்கள் வகுத்த சட்டவிதி. அந்த சட்டவிதியின்படி அவர்கள் நின்றார்கள். அப்படிபட்ட இயக்கம் இன்றைக்கு என்ன நிலையில் உள்ளது.
ஒரு மனிதாபிமான அடிப்படை கூட இல்லாத, சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்றுக்கொண்டு நான் சொல்வதுதான் சட்டம் என தோற்றுப்போய் நிற்கிறார்கள்.
அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது. இந்தக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாதான். புரட்சித் தலைவர் தொண்டர்களுக்கான இயக்கமான உருவாக்கி, வழிநடத்தினார்கள்.
மற்ற கட்சிகளில் அப்படி இல்லை. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட பதவிக்கு வர முடியும். திமுக வாழ்வதற்கும் வளர்வதற்கும் அரசாட்சியில் இருப்பதற்கும் புரட்சித் தலைவர்தான் காரணம்.
அவர் நெற்றியில் கூட உதய சூரியன் படத்தை போட்டு நடித்தார். சாமானிய மக்களிடம் அக்கட்சியை கொண்டு சென்றார். ஆனால் அவருக்கு அந்தக் கட்சியில் அவருக்கு என்ன நிகழ்ந்தது.
அதன்பிறகுதான் சாதாரண தொண்டர் கட்சிக்கு தலைவராக வர வேண்டும் என தேர்தல் விதியை வகுத்தார். அதனால்தான் ஓபிஎஸ் என்ற தொண்டன் கழக ஒருங்கிணைப்பாளராக வர வழிவகுத்தது” என்றார்.
தொடர்ந்து, “இன்று கட்சி கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பப்பு வேகாது” என்றார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். அதைப் பார்த்து மகிழ்ச்சியுற்ற ஓபிஎஸ், “இதுதான் மக்கள் குரல்” என்றார்.
பின்னர், “இது ஒரு ஜனநாயக படுகொலை” என்றார். மேலும் எங்கள் உயிரே போனாலும், புரட்சித் தலைவர் கொண்டுவந்த சட்டவிதியை திருத்த விட மாட்டோம்” என்றார்.
இதையடுத்து, “கழகத்தின் சட்ட விதியை காப்பாற்ற நாம் போராடி வருகிறோம். இதில் நாம் வெற்றி பெறுவோம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மேலும், “தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என எடப்பாடி சொல்லிப் பார்க்கட்டும், அவர் எங்கே போவார் என்றே தெரியாது” என்றார்.
இந்நிலையில், “தாம் கடந்த 4 ஆண்டுகளாக ஏமாற்றப் பட்டேன்” என்றும் ஒபிஎஸ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/