OPS condemns BJP office petrol bomb attack: ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வண்ணம் பாஜக மாநில அலுவலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டை வீசியது வினோத் என்பவர் என்று கண்டறிந்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர், வினோத்(38) மற்றும் அவரது பெற்றோர் மணி- மாரியம்மாள் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக தலைமை அலுவலகம் மீது 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்தது.
இந்தநிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முந்தைய ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், திமுக அரசு எப்படி நடந்துக் கொண்டதோ, அதே முறைதான் தற்போதும் கையாளப்பட்டு வருகிறது. 2006 உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் வன்முறை அரங்கேறியது. ஆனால் தற்போது வாக்கு பதிவிற்கு முன்பே, திமுக வன்முறை வெறியாட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்று மக்கள் நினைக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜனநாயகத்தில் ஆளும் கட்சியையும், அரசையும் எதிர்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு. அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம் அடிப்படையானது. ஆட்சியில் இருப்பவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்சி செலுத்த வேண்டும். ஆனால் திமுக அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக, இன்று பாஜக மாநில அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இது திமுகவின் சதிவேலை என பாஜக குற்றம் சுமத்துகிறது. இச்சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil