/tamil-ie/media/media_files/uploads/2023/01/OPS-3.jpg)
OPS
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 27-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறது. தி.மு.க, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தேர்தல் பணிக்காக 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தி.மு.க அமைத்துள்ளது.
அ.தி.மு.கவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனிதனியாக செயல்பட்டு வரும் நிலையில் இருவரும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். அ.தி.மு.க கூட்டணி கட்சியான த.மா.கா போட்டியிடவில்லை என அறிவித்தது. ஆனால் தங்கள் ஆதரவு குறித்து இன்னும் கூறவில்லை. அதேபோல் பா.ஜ.க-வும் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பா.ஜ,க போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவினர் போட்டியிட விருப்பினால் விருப்ப மனுக்களை பெறலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.