அ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், ஆளாளுக்கு கருத்துச் சொல்வதால், உருவாகியுள்ள சர்ச்சை புயல், இப்போதைக்கு ஓயாது என தெரிகிறது.
முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பரபரப்புக்கு இடையே அதிமுக தலைமை கூட்டறிக்கை சற்று நேரத்திற்கு முன்பாக வெளியானது. தொண்டர்களுக்கு நிலவரத்தை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், "கட்சி ரீதியான கருத்துக்களை பொதுவெளியில் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/d3VSrngdet
— AIADMK (@AIADMKOfficial) August 15, 2020
இதற்கிடையே, இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி முழுவதும் 'அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்', 'ஜெ-வின் ஆசிபெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ்' என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இந்த, போஸ்டர் எழுப்பிய பரபரப்பு சென்னை ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலித்தது.
சுதந்திர தினவிழாவை முடித்த கையோடு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகத்தில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி , சி.வி சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள் கூடி பேசினர். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல் வேட்பாளர் யார் என்று அமைச்சர்கள் மட்டத்தில் பேசப்பட்ட விஷயம் தற்போது கட்சித் தொண்டர்கள் வரச் சென்றுவிட்டது. சட்டமன்றத் தேர்தலை ஒன்றிணைந்து போராட அதிமுக முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று ஜெயக்குமார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர்கள் அனைவரும் துணை முதவர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினர். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டனர். பன்னீர் செல்வம் இல்லத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அமைச்சர்கள், கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி. பழனிசாமி இல்லத்திற்கு சென்று ஆலோசனை மேற்கொண்டனர். 30 நிமிடத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிகின்றன.
இதற்கிடையே, போடி தொகுதியில் இன்று காலை ஒட்டப்பட்ட 'அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்' போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் உத்தரவின் பேரில் தான் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இரண்டாவது முறையாக ஆலோசனை:
இதற்கிடையே, முதல்வர் வீட்டில் ஆலோசனை முடிந்த பிறகு தற்போது, அமைச்சர்கள் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். இன்று சுமார் 3 மணி அளவில் இந்த ஆலோசனை நிறைவடைந்தது. இதனையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ் உள்ளிட்டோர் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டரில், "எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! " என்று பதிவு செய்தார்.
தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! என்று கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஒ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.