சென்னையில் திங்கள்கிழமை (ஆக.1) சார்பில் மாநில தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக (எடப்பாடி அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாங்கள் அதிமுக கட்சி சார்பில் கலந்துகொண்டோம். அவர்கள் எந்தக் கட்சி சார்பில் கலந்துகொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர் எந்தக் கட்சியை சார்ந்தவர் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும்” என்று பேசினார்.
இந்தப் பேட்டி நடந்துகொண்டிருக்கும்போதே போலீசாரை பார்த்து, “என்னங்க.. போலீசுக்கு என்ன வேலை.. நிருபர்களிடம் பேசுவதைக் கூட பேசக் கூடாது என்று சொல்வீர்களா? தப்புங்க. தப்பு.” என்று கடிந்துகொண்டார்.
இதையடுத்து ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்திக்கையில், “அதிமுக ஓ.பி.எஸ்., தலைமையில்தான் செயல்படுகிறது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே உள்ளார். இடைக்காலத்தில் நடந்த கூத்துகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை” என்றார்.
மேலும், ‘கட்சியின் தலைவர் ஓ.பி.எஸ்.,தான். தேர்தல் ஆணையத்தில் அவர் பெயரில்தான் கட்சி உள்ளது. அவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் கலந்துகொண்டோம்” என்றார்.
ஜெயக்குமார் கருத்துக்கு பதிலளித்த கோவை செல்வராஜ், ‘அவர் என்ன பேசினார் என்பது தெரியாது. அவர் எப்ப வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,தான் என உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல். கட்சியில் எம்எல்ஏ, அமைச்சர் என இருந்தவர் இவ்வாறு செய்யலாமா? இந்தக் கேவலமான செயலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
நீங்கள் ஒருவர்தான் கலந்துகொண்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு, "சிங்கம் சிங்கிளாதான் வரும், ஒ.பி.எஸ் அனுப்புன ஓர் ஆள் போதும், அந்த மாதிரி டப்பா பசங்கள அடக்கிடுவோம்” எனப் பதிலளித்தார்.
முன்னதாக தேர்தல் ஆணையக் கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் முதல் ஆளாக வந்துவிட்டார். அவர் அதிமுக பெயர் பலகை பொறித்த இடத்தில் அமர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் அடுத்து வந்த ஜெயக்குமார் பெயர் பலகையை தன்பக்கம் திருப்பினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இருவரும் மரியாதை நிமிர்த்தமாக கூட ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து இருவரும் செய்தியாளர் சந்திப்பில் சூடான கருத்துகளை பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“