தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வியைத் தொடர்ந்து, சசிகலா, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
அண்மையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் உள்ள அவருடைய இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினர்.
தேனியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் 200 பேர் கூடி அதிமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து வந்து கட்சியை ஒன்றிணைக்க முடிவு செய்துள்ளார். இந்த இயக்கத்திற்கு சசிகலாவின் ஆதரவு இருப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அதிமுக தேனி மாவட்டச் செயலர் சையத் கான் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்ததால் அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததாகவும், இதை மாற்ற, வெளியேறிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார்.
“கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம். இதற்கு முன்னர், முன்னாள் முதல்வர்கள் ஜானகி ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா தலைமையில் கட்சி இருவேறு அணிகளாகப் பிரிந்தபோது, தேர்தலில் தோல்வியடைந்தோம். ஆனால், அதன் பிறகு இரு அணிகளும் ஒன்றிணைந்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தோம்” என்று சையத் கான் கூறினார்.
தொடர்ந்து பேசிய சையத் கான, “அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்ததால், நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம். இதை மாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக நின்றால் எந்த காலத்திலும் நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது. தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்துள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இம்முயற்சி மாநிலம் முழுவதும் நடைபெறும். இது ஆரம்பம்தான்” என்று கூறினார்.
இந்த கூட்டத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக, அமமுகவின் அனைத்து முக்கிய தொண்டர்களையும் வியாழக்கிழமை அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று சந்திக்கவும் சசிகலா அணி திரும்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது.
2017ம் ஆண்டு மாநிலத் தலைமைக்கு ஆதரவாக சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கி வழக்கமான தீர்மானம் நிறைவேற்றாத 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அதிமுக மாவட்டக் குழுக்களில் தேனி மாவட்ட அதிமுகவும் இடம் பெற்றிருந்தது. இது ஒரு ஆரம்பம்தான் என சசிகலா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “இந்த முக்கியமான தேர்தல்கள் காரணமாக அவர் தலையிட விரும்பவில்லை. ஆனால், இந்த தோல்விகள் அனைத்தும் கட்சி மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கின்றன. கட்சியை மீண்டும் இணைப்பது அவருடைய ஒரே திட்டம்” என்று சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே, சமீபத்திய நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவது என டி.டி.வி. தினகரன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் இதே கோரிக்கையை மேலும் பல குரல்கள் எழுப்ப வாய்ப்புள்ளது.
கோவை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி. ஆறுக்குட்டி, அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல சசிகலா அல்லது தினகரன் வழிநடத்த வேண்டும் என்று இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதிமுக உயர்மட்டத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அதிமுகவுடன் அமமுகவை இணைக்க வேண்டும் என்று சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவையோ, டி.டி.வி. தினகரனையோ கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களுடன் தொடர்பில் இந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், கட்சியின் முக்கியப் பதவியான இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மாவட்டக் நிர்வாகங்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது.
சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்தபோது சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் இப்போது அவர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் சந்தித்தார். பழனிசாமியை கட்சியில் ஓரங்கட்டினார் என்றும் செய்திகள் வெளியாகின.
அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா விரைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர் கவனமாக அமைதியாக இருக்க முடிவு செய்ததால், தினகரனின் அமமுக மெல்ல மங்கத் தொடங்கியது.
மக்களவைத் தேர்தல், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் என 2019ம் ஆண்டுக்கு பிறகு அதிமுகவுக்கு ஏற்பட்ட பெரிய தோல்விகளில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வி முக்கியமானதாக கருதப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.