சென்னையில் அதிமுக பொதுக்குழுவை கடந்த ஜூலை 11ஆம்தேதி நடத்திக்கொள்ள உயர் நீதிமன்ற தனிநீதிபதி அனுமதி அளித்தார். இந்தப் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அன்றைய தினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வன்முறை வெடித்தது. தொண்டர்கள் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் கட்சியின் தலைமையகத்தில் இருந்து சில முக்கிய கோப்புகளை ஓ.பன்னீர் செல்வம் எடுத்துச் சென்றதாகவும் புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்து பூட்டுப்போடப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரான ஓ.பன்னீர் செல்வமும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி கே பழனிசாமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தனி நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை15) விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன், ‘ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு டைரி எண் கூட ஒதுக்கப்பட்டுவிட்டது” என்றார்.
தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட மனோஜ் பாண்டியன், எந்த நீதிமன்றமும் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லை எனக் கூறவில்லை. ஆகவே அவர் கட்சி தலைமையகம் செல்ல தடையில்லை. இரு தலைவர்களுக்கு இடையேயான சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்றார்.
மேலும், 'பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நாளில் கட்சி அலுவலகத்தை மூடுவது போன்ற நடைமுறை இல்லை என்றும், குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் சென்னையில் குவியும் போது, பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேண்டுமென்றே செய்ததாக பாண்டியன் குற்றம் சாட்டினார். பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் நுழைய முடியாதபடி அலுவலகத்தை பூட்டினர்' என்றும் கூறினார்..
மறுபுறம், பழனிசாமியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆகியோர், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆட்கள் மீது அத்துமீறல் மற்றும் திருட்டு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இவர்கள் மேலாளரால் பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர்.
தொடர்ந்து வன்முறை காட்சிகள் தொடர்பான காணொலிகளை வெளியிட்ட அவர், ஓ.பன்னீர் செல்வம் ஆள்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டது செல்லாது என்றும் கூறினார். அப்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 145 மற்றும் 146(1) பிரிவுகளின் கீழ், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து இணைக்க, வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ.,) பிறப்பித்த இரண்டு உத்தரவுகளில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்.
இந்த சிவில் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜூலை 25ஆம் தேதிக்குள் வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.