சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு, அதிமுகவின் செயல்பாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது. வழிகாட்டுதல் குழுவின் செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் அமைப்புத் தேர்தலுக்கு தாயாராவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கூட்டப்பட்டாலும், அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவை விரிவாக்குதல் போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் காரசாரமான விவாதங்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இண்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவினர் சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும் ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, உள்ளாட்சித் தேர்தலில் என்ன வியூகம் வகுப்பது என்பது குறித்து தனது கருத்தை தெரிவிக்க எழுந்தபோது பிரச்சனை தொடங்கியுள்ளது. அரக்கோணம் முன்னாள் எம்.பி ஜி.ஹரி முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விமர்சித்து கருத்துக்களை கூறியதற்காக அன்வர் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறிய அன்வர் ராஜாவுக்கு ஆதரவாகச் திருவள்ளூர் முன்னாள் எம்.பி பி.வேணுகோபால் பேசியிருக்கிறார்.
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சி மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். அதிமுகவுக்குள் பல்வேறு சமூகத்தினருக்கு போதிய இடம் வழங்க வேண்டும் என ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தினார்.
நான்கரை மணி நேரத்துக்கு மேல் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டுதல் குழு குறித்து ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
கட்சியில் சில மூத்த உறுப்பினர்களை கொண்டுவருவதர்காக வழிகாட்டுதல் குழுவை விரிவாக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், முக்கிய முடிவெடுப்பதில் வழிக்காட்டுதல் குழுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பல பிரச்சனைகளை திறம்பட கையாள முடியாத நிலையில், குழுவிற்கு அத்தகைய ஒரு பாத்திரம் வழங்கப்படுவதற்கான யோசனை குறித்து பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்குக் வன்னியர்களுக்கு 10.5% வழங்கப்பட்ட இடஒதுக்கீடும் ஒரு காரணம் என்று கூறியபோது, அதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அது கட்சிஒருங்கிணைந்து எடுத்த முடிவு என்று கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமான முறையிலும் ஜனநாயக முறையிலும் நடந்ததாகக் கூறினார்.
கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் முக்கிய முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கூறியதோடு வழிகாட்டுதல் குழுவை விரிவாக்க வேண்டும் என்று கூறினார். மேலும், வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11ல் இருந்து 18 ஆக உயர்த்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட, முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கலாமா என்பது குறித்த கேள்விக்கு தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்திய ஓ. பன்னீர்செல்வம், தான் எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை என்று விளக்கினார். ஓ.பி.எஸ்.ஸின் கருத்து இந்த விவகாரத்தில், முடிவெடுப்பதில் அனைத்து மூத்த உறுப்பினர்களும் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுளது. 10.5% இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, சட்டமன்றத்தில் மசோதாவை முன்வைத்தது அவர்தான் என்பதை ஒருங்கிணைப்பாளர் நினைவு கூர்ந்தார். ஆனால், மற்ற அனைத்து சமூகத்தினரும் அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில், ஓ.பி.எஸ் மட்டுமில்லாமல், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.ஏ.செங்கோட்டையனும் கட்சியின் வழிகாட்டுதல் குழுவை விரிவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் தற்போது, எதிர்க்கட்சித் தலைவராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு மிகுந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான், கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் வழிகாட்டுதல் குழுவுகு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் வழிகாட்டுதல் குழுவை விரிவாக்க வேண்டும் என்பதும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தைக் குறைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக கருதப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிகாட்டும் குழுவை விரிவுபடுத்த வலியுறுத்தியிருக்கிறர். அப்படி வழிகாட்டுதல் குழு விரிவுபடுத்தப்பட்டால், அதில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உள்ளே வரும் பட்சத்தில் இ.பி.எஸ் அதிகாரம் கட்சியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் ஒரு பகுதியினர், உள்ளாட்சிப் பொறுப்பாளர்களை மாற்றக் கோரி, கட்சித் தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர். டிசம்பர் 1ம் தேதி அதிமுக செயற்குழுவில் வழிக்காட்டுதல் குழுவை விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் இ.பி.எஸ் அதிகாரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.