அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி மதுரையில் ஒரு மாபெரும் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த அறிவிப்பை, அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னையில் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது; ‘நம்முடைய அரசியல் பாதை மிகவும் தெளிவாக உள்ளது. நாம் இந்த பாதையில் முன்னேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் படியாக, நம்முடன் இணைந்து செயல்படும், நமது கருத்துக்களையே தங்களுடைய கருத்துக்களாகக் கொண்ட, தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து ஒரு பிரமாண்டமான மாநாட்டை மூதூர், மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மதுரையில் நாம் கூட இருக்கிறோம். இந்த மாநாடு வெறும் கூட்டமாக முடிந்து கலைந்து போகும் ஒன்றல்ல. இது கொள்கையை வகுத்து, அதை நிறைவேற்றப் போகிறோம் என்ற லட்சிய முழக்கத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் மாநாடாக அமையும். இந்த மதுரை மாநாட்டில், நமது எதிர்காலத் திட்டம் என்ன, தமிழ்நாட்டை எந்த திசை நோக்கி அழைத்துச் செல்லப் போகிறோம், எந்த லட்சியத்தை அடையப் போகிறோம் என்பது குறித்த விரிவான விளக்கத்தை நமது தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க இருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக, நமது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்று லட்சிய உரையாற்ற இருக்கிறார்.
"பார் சிறுத்ததோ, மாநாடு பெருத்ததோ" என்ற அளவுக்கு பல லட்சக்கணக்கான மக்களை நாம் அங்கே சந்திக்க இருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக, மாவட்டங்கள் தோறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் நடத்துவார்கள். முதல் கட்டமாக, காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் வருகிற 20-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இந்தக் கூட்டத்தை நடத்துவார். வருவாய் மாவட்டம் தோறும் மாவட்டச் செயலாளர்கள் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, மாநாட்டின் சிறப்பு பற்றி எடுத்துச் சொல்லவும், மக்களை அங்கே அழைத்து வரவும் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நாம் யார் பின்னாலும் போகப் போவதில்லை. நாம் யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை. ஏற்கனவே அனைத்துப் பொறுப்புகளிலும் நமது அன்புக்குரிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களும், நானும் இருந்திருக்கிறோம். ஆகவே, அமைச்சரவையோ, முதலமைச்சர் பதவியோ அல்லது பிற பதவிகளோ எங்களுக்குப் புதிதல்ல. பலர் இன்னும் பதவிக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, மிகச் சிறந்த அரசியல் முடிவையும், தெளிவான தீர்மானத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில், அந்த மாநாட்டில் நமது முழக்கம் இருக்கும். நமது கொள்கைப் பிரகடனம் இருக்கும். நமது எதிர்காலத் திட்டம் இருக்கும், என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.