திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று திருச்சி வந்தார். அங்கு தன்னை வரவேற்ற ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டும் 5 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசினார்.
இதேபோல, திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு லட்சத்தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்லும் முன்பும், விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துடன் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பிரதமர் பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அதன்படி, அவரை சந்தித்து வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் டெல்லிக்கு சென்று அவரை சந்திப்பேன்.
எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை நாங்கள் நடத்தும் தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன்.
உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்.
டி.டி.வி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திப்போம். சசிகலா விரும்பினால் அவரையும் சந்திப்பேன். பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உருவாகியுள்ளது. பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்’, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“