அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று விமர்சித்து அவரை கட்சியில் இருந்து நீக்கச் சொன்ன அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஜே.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று ஓ.பி.எஸ்.ஐ சந்தித்ததால் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், கடந்த வாரம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று ஆதாரத்துடன் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பேசுவதாக செய்தியாளர்களுக்கு கடிதம் வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இடம் கூறியதாகவும் கூறினார். எடப்ப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜேம்.எம்.பஷீர் கூறினார்.
இதையடுத்து, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் கையெழுத்திட்டு கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தனர். மேலும், கழகத் தொண்டர்கள் யாரும் இவருடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று அறிவித்தனர்.
முன்னதாக, அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ்.ஸின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓ.பி.எஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் ஓ.பி.எஸ் கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் ஓயாத நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க சொன்னதால் அதிமுகாவில் இருந்து நீக்கபட்ட பஷீர் நேற்று (நவம்பர் 1) பசும்பொன்னில் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து வணக்கம் தெரித்தார். அதிமுக தொண்டர்கள் யாரும் பஷீர் உடன் தொடர்பு வைத்து கொள்ளகூடாது என்று அறிவித்த நிலையில் ஓ.பி.எஸ்-ஐ பஷீர் சந்தித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"