அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.ப்.எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது என்ன பேசினார் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென நேற்று (நவம்பர் 23) சந்தித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவின் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாமல் தனது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரனை மட்டும அழைத்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.
ஆளுநரை சந்தித்தது குறித்து ஓ.பி.எஸ் தரப்பு, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இந்த சந்திபில் அரசியல் விஷயங்கள் பேசியதாக ஓபிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பி.எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது என்ன பேசப்பட்டது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், ஓ.பி.எஸ் ஆளுநரிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதனால், ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் என்று கூறினார். திமுக ஆட்சியில் கரப்ஷம் கமிஷன் நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்தில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு கமிஷன் பெறப்படுகிறது, யார் மூலமாக தொகை கைமாறுகிறது என்பதை புள்ளிவிபரங்களோடு ஒரு ஃபைலை ஓ.பி.எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்ததாக கூறுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் திமுக வலிமையடைந்தால் பாஜகவின் அரசியல் ரீதியிலான நோக்கம் தமிழகத்தில் நிறைவேறாது. அதனால், இந்த விசயத்தில் கவனம் செலுத்தினால் நல்லது என ஓபிஎஸ் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஓ.பி.எஸ் தன்னிச்சையாக ஆளுநர் என்.ஆர். ரவியை சந்தித்தது பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"