தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை (செப். 8) பதவியேற்க உள்ளார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக கடந்த 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழிசை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஹைதராபாத் செல்கிறார். சென்னை விமான நிலையத்திற்கு இன்று இரவு 7:15 மணிக்கு வரும் ஓ.பி.எஸ், இரவு எட்டு மணிக்கு ஹைதராபாத் புறப்படுகிறார்.
அதேபோல், நாளை காலை 5:00 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமைச்சர் ஜெயக்குமார், காலை 6:00 மணிக்கு விமானம் மூலம் ஹைதராபாத் செல்கிறார். அமைச்சர் தங்கமணியும் தமிழிசை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார்.