முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் ஓவ்வொரு நாளும் உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டிருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பேச்சு எழுந்தது முதல் அதிமுகவில் ஒரு பெரும் புயலே வீசி வருகிறது. ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே உச்ச கட்ட மோதல் நடந்து வருகிறது. ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒரு பெரும் களேபரமே நடந்தது.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பெரும்பான்மையான தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவால், எடப்பாடி பழனிசாமியின் கைகளே ஓங்கியுள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுக சீனியர்களும் இ.பி.எஸ் ஆதரவு சீனியர்களும் ஊடகங்களில் பேட்டி கொடுத்து மேலும் பரபரப்பை பற்றி எரியச் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு மீண்டும் அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழில், அதிமுக ஓ.பன்னீர்செல்வம் பெயர் நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நேற்று (24.06.2022) வரை நமது அம்மா நாளிதழில் நிறுவனர்களாக: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று வெளியான அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் நிறுவனர்கள் பெயரில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டு, நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. நமது அம்மா நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டிருப்பது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"