முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன் நாம் எடுத்து கூறினோமோ, அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன்.
அதற்கேற்ப இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம், ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டையிலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன், என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று இரட்டை இலை சின்னம் உடன் அதிமுக போட்டியிடும் வாய்ப்பு உச்ச நீதிமன்றம் மூலம் கிடைத்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுவேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமல்ல, காட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினோர் பகையுணர்வோடு கூறி வந்தனர்.
இந்நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டு அறிந்த பின்னர் தான், பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தேடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு பாடமாக அமைந்துள்ளது", என்று கூறியுள்ளார்.