அதிமுக-வின் முன்னாள் தலைவரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி விசாரித்த நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கை அக்டோபர் 18ஆம் தேதி வெளியானதையொட்டி பலர் அதிர்ச்சியிலும் எதிர்ப்பிலும் உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஆறுமுகசாமி வெளியிட்ட அறிக்கையில் என்னைப்பற்றி தகவல் வெளிவந்திருந்தால் அரசியல் விமர்சகராக இருந்து எனது கருத்தை தெரிவிப்பேன்.
நேற்று சபாநாயகருக்கு எதிராக நடந்த போராட்டத்தை எனக்கு எதிராக நடந்தது என்று நான் கருத வில்லை.
எனக்கு ஆதரவாக இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருக்கிறார்கள். தமிழக முதல்வரை நான் சந்தித்ததற்கு அவர்கள் ஆதாரம் அளித்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு நான் தயாராக உள்ளேன்", என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது, "திமுக வின் மேல் உள்ள எதிர்ப்பினாலேயே 1972இல் இருந்து அதிமுக தொடர்கிறது. அதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல ஓ.பி.எஸ்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார் என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என்று கேட்கிறோம். அப்படி நிரூபித்தால் ஓ.பி.எஸ்.உடன் நாங்களும் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளோம். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பழனிசாமி கட்சியில் இருந்து விலக வேண்டும்.
மேலும், சட்டமன்றத்தில் நடக்கின்ற போராட்டம் தேவையற்றது. மக்கள் நலனுக்காக புரட்சி தலைவி அம்மா கொண்டுவந்த திட்டங்களை இன்று தமிழக அரசு செய்யவில்லை. தேவையற்ற போராட்டங்களையும் தேவையற்ற வெளிநடப்புகளையும் செய்கிறார்களே தவிர, இந்த கட்சிக்கும் மக்களுக்கும் தேவையானவற்றை முன்னெடுத்து செல்லவில்லை என்பதே எங்களுடைய கருத்து" என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil