அதிமுக வெற்றிக்காக தனது துணை முதல்வர் பதவியையும் விலக தயாராக இருப்பதாக நேற்று நடந்து செயக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தில் உருக்கமாக பேசிய ஒ. பன்னீர்செல்வம்:
அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதிமுக செயற்குழு கூட்டம்
இந்தக் கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கான இரங்கல் தீர்மான நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற செய்வதற்கான யுத்திகள் குறித்து பேசப்பட்டது.
பதவி விலக தயார் : ஓ. பன்னீர்செல்வம்:
கூட்டத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், அடுத்த தேர்தலை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறினார். மேலும், “அதிமுகவின் வெற்றியை நாம் எப்படி கட்டிக்காக்க வேண்டும் என்றே நான் உருக்கமாக பேசினேன். கூட்டணி என்பது நேரம் வரும் போது அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெரும் சூழல் உருவாகியிருக்கிறது. எங்களோடு இணைந்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.
அதிமுக வெற்றியே மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி. எனவே இதற்காக நான் உட்பட பிற மூத்த நிர்வாகிகளும் பதவியை துறக்க தயாராக உள்ளோம்.” என்றார். இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.