வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தின் உரிமை எங்களுக்கே என ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேவருக்கு அ.தி.மு.க சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டது. இது அதன்பிறகான ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது அணிவிக்கப்பட்டு, பின்னர் மதுரை வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படும். இதனை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க பொருளாளர் வங்கியில் இருந்து பெற்று, விழா கமிட்டியினரிடம் ஒப்படைப்பார்.
இதையும் படியுங்கள்: சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலை 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் – நிதின் கட்கரி
தற்போது அ.தி.மு.க இ.பி.எஸ் தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு என பிரிந்துள்ள நிலையில், இருவரும் தங்க கவசத்தைப் பெற வங்கியில் மனு அளித்துள்ளனர். இ.பி.எஸ் தரப்பு பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கியில் மனு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மதுரை வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி ஓ.பி.எஸ் தரப்பில் இன்று வங்கி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தற்சமயம் பொருளாளராகவும் இருக்க கூடிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேவரின் தங்க கவசத்தை வங்கிப் பெட்டகத்தில் இருந்து எடுத்து, கமிட்டியிடம் ஒப்படைப்பதற்காக அவர் தரப்பில் கடிதத்தை வங்கி அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம். கடிதத்தை ஏற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், எதிர் தரப்பு கடிதம் குறித்து கூறினார்கள். நாங்கள் எங்கள் தரப்பு விளக்கங்களை விவரித்தோம். வங்கி அதிகாரிகள் நான் கூறிய விளக்கங்களைக் கேட்ட பின்னர், இரு தரப்பு கருத்துகளையும் பரிசீலனை செய்து நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். எல்லா ஆண்டுகளையும் போல், இந்த ஆண்டு ஓ.பி.எஸ் அவர்கள் கவசத்தைப் பெற்று தேவருக்கு அணிவிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், என்று கூறினார்.
இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? யாரிடம் ஒப்படைக்க போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil