அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த திமுக நிர்வாகி மீது மணல் கடத்தல் புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை வழக்கமாக ஒரு எதிர்க்கட்சி தலைவர் வெளியிடும் அறிக்கை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் கண்டுகொள்ளமாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக ஓபிஎஸ் அறிக்கையில் புகார் கூறப்பட்டிருந்த மணப்பாறையைச் சேர்ந்த திமுக ஒன்றிய பொறுப்பாளர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், மணல்கடத்தலில் ஈடுபட்ட அந்த திமுக நிர்வாகியை திருச்சி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர் என்பது பலரையும் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “எல்லா மட்டத்திலும் திமுகவினரின் தலையீடு தலைவிரித்தாடுகிறது. திருச்சி மணப்பாறை அருகில் முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீஸார் சென்று சோதனை நடத்தி, ஜேசிபி மற்றும் 2 டிப்பர் லாரிகளைபறிமுதல் செய்தனர். ஓட்டுநர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவை மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என்று தெரியவந்தது.
இதேபோல, புதுக்கோட்டை காரையூர் அருகில் கீழ்த்தானியம் பகுதி கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மணல் கடத்திய லாரியை பிடிக்க முயற்சித்தபோது, அவர்களை லாரி ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிய நிலையில், லாரியில் இருந்து 3 பேர் இறங்கி வந்து அவர்களை தாக்கியுள்ளனர்.
இதுபோன்ற மணல் கடத்தல் சம்பவங்கள்ஆங்காங்கே நடந்து வருவதாக தகவல்கள்வருகின்றன. காவல் துறையினரை மிரட்டுவதும், வருவாய் துறை அதிகாரிகளை கொல்லமுயற்சிப்பதும் கண்டனத்துக்குரியது. இந்தநிலை நீடித்தால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்.
எனவே, இப்பிரச்சினையில் முதல்வர்உடனே தலையிட்டு, மணப்பாறை திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மற்றும் புதுக்கோட்டையில் அதிகாரிகளை கொல்ல முயற்சித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துதண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
ஓ.பி.எஸ்.சின் அறிக்கை திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதையடுத்து, திமுக மனப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட திமுக மணப்பாறை நிர்வாகி மீதான நடவடிக்கை இத்துடன் நிற்கவில்லை. அவரைக் கைது செய்யவும் திருச்சி மாவட்ட போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணப்பாறை திமுக நிர்வாகி ஆரோக்கியசாமி விஷயத்தில் என்ன நடந்தது என்று போலீஸ் வட்டாரங்களை விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: “மணல் கடத்தல் விவகாரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மணப்பாறையைச் ஆரோக்கிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
திருச்சி சரகடிஐஜி ராதிகா இந்த விவகாரத்தில் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன் மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்தும் டிஐஜி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணையில், மணப்பாறை முத்தப்புடையான்பட்டி பகுதியில் ஜூலை 12ம் தேதி இரவு மணல் கடத்தல் தொடர்பான தகவலின்பேரில் தனிப்படைபோலீஸார் 2 டிப்பர், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி இந்த வாகனங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர ஓபிஎஸ் அறிக்கை வெளியிட ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றதால் ஆரோக்கியசாமி சிக்கிக்கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.