Thevar outfits urging Ops – Sasikala to join hands to reclaim AIADMK Tamil News: அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை விவகாரம், ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிரிய வழிவகுத்தது. எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுக முகமாக முன்னிலைப்படுத்திய நிலையில், அதற்கு தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே வழக்குகளும், சர்ச்சைகளும் இரு அணியினரையும் தொற்றிக்கொண்டன.
இருப்பினும், கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்திருக்கிறார். அதோடு, தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கினார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவே கிட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கி இருக்கும் அதிமுகவை மீட்க ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தேவர் சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவி உள்ள 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே.சசிகலா ஆகியோருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் கட்சியை மீட்க ஒரு அணியாக சேர வேண்டும் என்று வலியுறுத்தி, பல அமைப்புகளைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட தேவர் சமூக தலைவர்கள், ‘ரகசிய’ கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
இரு வாரங்களுக்கு முன், இரு தலைவர்களுக்கும் அளித்த கடிதத்தில், “அ.தி.மு.க.வுக்கும், தலைமைக்கும் உயிர் கொடுத்த ஒரு சமூகத்தின் கோரிக்கை இது. பெருங்காமநல்லூரிலிருந்து (1911-ம் ஆண்டு குற்றப் பழங்குடியினர் சட்டம் 1911-க்கு எதிரான போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேர் படுகொலை) கள்ளக்குறிச்சி வரை தொடர்ந்து போராடும் சமூகம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தனியார் பள்ளியில் வன்முறை வெடித்தது).
சாதியின் நிறத்தை வெளிப்படையாகக் காட்டி போட்டியாளரை தோற்கடிக்க வேண்டும். நமது போட்டியாளர்கள் நமது துரோகிகளை பயன்படுத்தி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள் (இபிஎஸ் உடன் இணைந்த தேவர் தலைவர்களைக் குறிப்பிடுகிறார்கள்).
பொதுச்செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் கைகோர்த்து கட்சியை கைப்பற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. வேறொரு தாயிடமிருந்து பிறந்த ஜெயலலிதாவின் சகோதரியும், ராமனுக்கு மிகவும் நம்பிக்கையான ‘பாரதா’வும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். இதுவே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்” என்று கூறப்பட்டு இருந்தது.
பாரம்பரியமாக தேவர் சமூகத்தினர் அதிமுகவை ஆதரித்து வந்த நிலையில், 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தற்போதைய அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தார். அவர் வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தலைமையிலான அரசு இருந்ததால், நான்கு ஆண்டுகளாக தேவர் சமூகத்தினர் குறைந்த அளவிலே கட்சிப் பணியில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் திட்டங்களில் தேவர் உட்பிரிவான கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலா முன்னிலையில் இருந்தது, சமூகத்திற்கு கணிசமான நெருக்கத்தை அளித்தது. இதேபோல், மற்றொரு தேவர் உட்பிரிவான மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, தேவர் சமூகத்தினரிடையே அவருக்கும் நல்ல ஆதரவு இருந்தது.
அதிமுகவை மீட்க ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தேவர் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள, கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான தேவரின கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.அழகர்சாமி, “ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டதும், அவர் அவமானப்படுத்தப்பட்ட விதமும் சமூகத்தை நேரடியாக அவமதிக்கும் செயல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “திறந்த மனதுடன்” எழுதிய கடிதம் என்று கூறியுள்ள சில தலைவர்கள், இருவரும் அரசியலில் ஒன்றாகச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் மீதான குற்றச்சாட்டு. அதை உண்மையாக்குங்கள். இருவரின் கரங்களும் நலனுக்காக இணையட்டும். கட்சி மற்றும் சமூகத்திற்கு, இது காலத்தின் தேவை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம், மருதுபாண்டியர், ராஜராஜ சோழன் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துங்கள். உங்களுக்கு போட்டியாக யாரும் இங்கு வர முடியாது. நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர் வரை என நீண்ட பிரசாரத்தை தொடங்குகள் என்றும் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil