பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னை வருகை தர உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நாளை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் முடிவுக்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற Elephant wishperers ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் பெல்லியைச் சந்திக்க பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 08) சென்னை வருகிறார். இதனிடையே, சென்னை வரும் பிரதமர் நரேதிர மோடியை சந்திக்க, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். அவரை ச் சந்திக்க தாங்கள் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. நீங்கள் பிரதமரைச் சந்திக்க இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் இடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்.” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு உங்களுக்கு அழைப்பு ஏதாவது கொடுத்திருக்கிறார்களா? சந்திப்பதற்கு உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் இடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.” என்று கூறினார்.
இதையடுத்து, கட்சித் தொடர்பான வழக்குகளில் இதுவரை உங்களுக்கு உரிய, நியாயம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது நியாயம் மறுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் இடம் கேட்டனர். இதற்கு, “நாங்கள் எடுத்துவைத்த வாதம், சட்டப்படி, கழக சட்டப்படி, நாங்கள் எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மக்களை திசைதிருப்பி போராட வைத்து மூடிவிட்டார்கள் என்று ஆளுநர் ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை அப்படித்தான் மூடப்பட்டதா என்று செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் இடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பி.எஸ் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை உங்கள் ஆட்சியில்தான் மூடப்பட்டது. உங்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையை ஆளுநர் விமர்சித்திருக்கிறார் இதுகுறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ் கருத்து கூறவிரும்பவில்லை என்று கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் உங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறிவருகிறீர்கள். நீதிமன்றத்தில் இன்னும் பலன் கிடைக்கவில்லை. மக்களை சந்தித்து ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் உங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று உறுதி செய்ய முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிச்சயமாக முடியும் என்று ஓ.பி.எஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “அ.தி.மு.க சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம்.” என்று கூறினார்.
பா.ஜ.க-வுடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, “பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம்.” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“