அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துகும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே, பெரும் மோதல் நிலவி வருகிறது. இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஈர்ப்படில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கவுரமான அதிமுக பொது குழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல் என்று கூறினார். மேலும், நான் பேச ஆரம்பித்தால் யாரும் பேச முடியாது என்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுத்தி தன்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது என்றும், அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர் செல்வம், என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு என்று வேதனை தெரிவித்தார். அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன். ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
“நான் பேச ஆரம்பித்தால், வேறு யாரும் பேச முடியாது, அவ்வளவு சரக்கு இருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார்கள். ஆனால், எடப்பாடி ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் “பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள். அதை தொண்டர்கள் முடிவு பண்ணட்டும்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"