அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பெரும் புயலாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை; ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை இ.பி.எஸ்-தான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்” என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவாதம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பலப்பரீட்சைக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: “அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவர் வகித்த பொறுப்பை எவரும் வகிக்கக் கூடாது என்பதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது.
அப்போதுகூட நான் கேட்டேன், இந்த இரட்டைத் தலைமை என்பது இதுவரை இல்லாமல் இருந்த ஒன்று. பொதுச்செயலாளர் தவிர்த்து மற்ற தலைமைப் பொறுப்புகள் எதையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்தலாமே என்றேன்.
எனக்குத் துணை முதல்வர் பொறுப்பு தேவையில்லை. இரண்டு முறை அம்மாவால் (ஜெயலலிதாவால்) முதல்வராக்கப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அந்தப் பொறுப்பை ஏற்றேன்.
இந்த இணைப்பு அவசியம் தேவை என்ற நிலை உருவானது என்றால், டிடிவி தினகரன் 17 எம்எல்ஏ-க்களை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். டி.டி.வி. தினகரனிடம் இருந்த 17 எம்எல்ஏ-க்கள், திமுக எம்எல்ஏ-க்கள், எங்களிடம் இருந்த 11 எம்எல்ஏ-க்கள் இருந்ததால், அதிமுக ஆட்சி பறிபோக வேண்டிய நிலை உருவானது.
இந்தச் சூழலில்தான், தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் 2016-இல் இந்த ஆட்சியை ஜெயலலிதா நிறுவினார். அந்த ஆட்சி பறிபோகக் கூடாது என்பதால்தான், 5 வாக்குகளில் பழனிசாமி தலைமையிலான அரசு காப்பாற்றப்பட்டது.
டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்; 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்.
அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி; தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது. எம்.ஜி.ஆர்; ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு கட்சி நடவடிக்கையிலும் இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்ற உரிமை இருவருக்குமே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொண்டர்கள் உள்ளத்தில் இரட்டைத் தலைமை எண்ணம் இருந்ததன் காரணத்தினால், இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொண்டேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பொறுப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.
பிரதமர் அழைப்பின்பேரில் டெல்லி சென்று அவரிடம் உரையாடிபோது, நீங்கள் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவரிடமும் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் அழுத்தம் கொடுத்ததால், அதை ஏற்றுக்கொண்டேன்.
அதன்பிறகு, நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நீங்கள் தற்போது ஒற்றைத் தலைமை பற்றி கேட்பது கனவா நனவா என்ற நிலை இருக்கிறது.
ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்; 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு இபிஎஸ் உடன்பட வேண்டும்; ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள்; தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்; இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை; தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன்; 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும்
அனைத்தையும் நான் விட்டுக்கொடுத்தது தொண்டர்களுக்காக மட்டுமே; விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை; கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு பன்னீர்செல்வம் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அனைத்தையும் விட்டுக்கொடுத்தேன்.” என்று கூறினார்.
சசிகலாவை எந்த அடிப்படையில் பொதுச் செயலாளர் அக்கினீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நீங்கள் கேட்டது சரியான கேள்வி” என்று கூறிய ஓ.பி.எஸ், பொதுச் செயலாளராக இருந்த அம்மா (ஜெயலலிதா) இறந்துவிட்ட நிலையில், தற்காலிக ஏற்பாடாக கட்சியை வழிநடத்த சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கினோம். சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள்; தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்.” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், “எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா? நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை; பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது. திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை; ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம்; மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.