எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தேனியிலிருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இதையும் படியுங்கள்: இந்தி திணிப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையது இல்லை – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
அப்போது சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, தமிழக மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்பட்டிருக்க கூடிய பின்னடைவுகள், அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப உள்ளோம் என்று கூறினார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம் குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவைத்தலைவர் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம், என்று ஓ.பி.எஸ் கூறினார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அருகருகே அமரப்போவது குறித்த கேள்விக்கு, எதிர் எதிர் என நீங்கள் கூறுகிறீர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்திற்காக உருவாக்கி வளர்த்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் செயல்பாடு நடவடிக்கை இருக்கும். தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே எம்.ஜி.ஆர் சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். அதை தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம், என்று ஓ.பி.எஸ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil