ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டு தலைமை வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்றி வந்தோம். அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. 4 ஆண்டுகள் ஈபிஎஸ் ஆட்சிக்கு முழு ஆதரவு தந்தோம்.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல்களை எங்கள் மனங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட்டு மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பை ஏற்க வேண்டும். இதற்கு உறுதியாக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.
எண்ணம், செயல் - இணைப்பு மட்டுமே
ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கை உரிய எதிர்க்கட்சியாக முதல் அரசியல் கட்சியாக எதிர்க்கும் கட்சியாக அதிமுக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவருக்கு நாங்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளோம். இருவரும் இணைந்து பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றியிருக்கிறோம். இந்த நிலை மீண்டும் வர வேண்டும்.
எங்களுடைய எண்ணம், செயல் எல்லாம் இணைப்பு, இணைப்பு, இணைப்புதான். நாங்கள் இந்த அறைகூவலை விடுப்பதன் நோக்கமே, எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. இதற்குமுன் நடந்தவைகளை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம்.
சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு
ஒன்றுபட்ட அதிமுக என்றால் அதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் வருவார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், எங்களை பொருத்தமட்டில் எம்ஜிஆருடன் உடனிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள், இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்கு பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றி நடை போட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
நாங்கள் சசிகலா, தினகரனுடனோ , அவர்கள் எங்களுடனோ போக வேண்டும் என்ற நிலை இல்லை. அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். யாராக இருந்தாலும் என்பதில் சசிகலாவும் இருக்கிறார், டிடிவி தினகரனும் இருக்கிறார்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.