அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில், நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பினர் மன்னிப்பு கோரிய நிலையில், தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 11-ம் தேதி நீங்கள் பிறப்பித்த உத்தரவில் வழக்கு தொடர்பில்லாத ஓபிஎஸ்-க்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “உங்கள் கருத்து நீதிமன்றத்தை கலங்கப்படுத்தும் வகையிலும் கீழ்த்தரமாக உள்ளது. நீதித்துறையைக் கலங்கப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டாம். இந்த வழக்கு தொடர்பாக நான் தெரிவித்த கருத்து திருப்தி இல்லையென்றால், அதைத் திருத்தம் செய்யக்கோரி தன்னிடமே அணுகி இருக்கலாம். உத்தரவில் திருப்தி இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், நீதிபதியை மாற்றக் கோருவது கீழ்த்தரமாக இருக்கிறது” என ஓ.பி.எஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 05) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில் நீதிபதியிடம் ஓ.பி.எஸ் தரப்பினர் மன்னிப்பு கோரினார்கள். இருப்பினும், தற்போது விசாரிக்கும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பே வாதிட விரும்புவதாகவும் ஓ.பி.எஸ் தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர். மேலும், நாங்கள் தனி நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்த கருத்துகளை சுட்டிக்காட்டியே கோரிக்கை வைத்தோம். இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என்று ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2 நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறியிருந்தால் நானே வழகில் இருந்து விலகியிருப்பேன் என்று கூறினார். இந்த நிலையில், இருப்பினும் வழக்கில் இருந்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியுள்ளார். இதனால், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”