முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.கவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க உடைந்துள்ளது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா எனத் தனித் தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார். ஓ.பி.எஸ் முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஒன்றை தலைமை விவகாரத்தில் சட்டப் பேராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்மையில் ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் எனக் கூறினார். இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் இதற்கு விளக்கம் அளித்து முகநூல் பதிவிட்டுள்ளார். அதில், "மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். தற்போது அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிறார் என்று ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலையை கடை கோடி கழக தொண்டனின் ஒருவனாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்கள் பதவி ஏற்றார்கள். அதற்குப் பிறகு ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று அவர்களை மூளைச்சலவை செய்தார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போயஸ் கார்டனில் நடந்த கலந்துரையாடலில் தன்னுடைய கருத்தான, "நான் முதலமைச்சர் பதவியை தந்து விடுகிறேன்; ஆனால் அதற்கு தற்போதைய காலச் சூழ்நிலைகள் சரியாக இல்லை" என்று என் மனது சொல்கிறது.
தற்போது கட்சியை வலுப்படுத்த வேண்டிய தருணமாக இருக்கிறது; தாங்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து அவர்களின் பேராதரவுடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அதுதான் கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் நலனாக அமையும் என்று தனது கருத்தை எடுத்துரைத்தார். ஆனால் அவருடைய கருத்தை அப்போது யாரும் ஏற்கவில்லை. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் வற்புறுத்தலால் தனது முதலமைச்சர் பதவியை கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு, கட்சிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்று மன வருத்தத்துடன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நினைவிடத்தில் வணங்கிவிட்டு, கழகத்தின் உயிர் நாடியான தொண்டர்களிடம் உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்காக நினைவிடம் சென்றார்.
அனைவரும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் சுயநலத்தோடு பதவிக்காக அங்கு சென்றார் என்றால், ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது அவருடன் அழைத்து சென்றிருக்கலாம்; அல்லது தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அமர்ந்து அரசியல் செய்திருக்கலாம்; ஆனால் இவற்றையெல்லாம் அப்போது அவர் செய்யவில்லை. தனி ஒருவராக அங்கு சென்று தன்னுடைய மனதில் தோன்றிய கருத்தை தமிழக மக்களுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் தெரிவிப்பதற்காக பேட்டியாக கொடுத்தார். அந்தப் பிரச்சனையை அப்போதே கலந்து பேசி, சரி செய்திருந்தால் பிரச்சனைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.