ops son ravindranath controversy : நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ஓபிஎஸ் மகன் ரவிந்தரநாத் குமார் தான். இத்தனை வருட அரசியல் பயணத்தில் முதல் முறையாக தனது மகனை தேர்தல் களத்தில் இறக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பிஎஸ்.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட ரவிந்தரநாத் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஆவர். அதனால் தான் ரவிந்தரநாத்தின் வெற்றி அதிமுக சார்பில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. தேனி தொகுதியின் எம்பி ஆனார் ரவிந்தரநாத்.
இது தேர்தல் முடிவுக்கு பின்பு உறுதி செய்யப்பட்டது என்றாலும், முடிவு வருவதற்கு முன்பே கோயில் கல்வெட்டில் எம்.பி ரவிந்தரநாத் குமார் என பொரிக்கப்பட்டு முதல் சர்ச்சையில் சிக்கினார் ஓபிஎஸ் மகன். அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் இறுதியில் முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். ஓபிஎஸ் மகனுக்கு தெரியாமலே அவர் வெற்றி பெறுவது உறுதி என நினைத்து கல்வெட்டில் அவர் எம்.பி என எழுதியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், கல்வெட்டு நிஜமானது. தேனி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியானர் ரவிந்தரநாத் குமார். இருந்த போதும் சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. நேற்று இரவு முதல் தேனி அதன் சுற்று வட்டாரப்பகுதியில் போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்திய அமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை கண்ட எதிர்கட்சிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் பல்வேறு விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/sachin-41-300x169.jpg)
அதுமட்டுமில்லை அதிமுக சார்பில் நடைபெறும் திருமண விழா ஒன்றின் பத்திரிக்கையிலும் மாண்புமிகு. ஓ.ப.ரவீந்திரநாத் குமார், எம்.பி, மத்திய அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி தொகுதியில் வெற்றி ரவீந்திரநாத் குமாருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் மத்திய அமைச்சர் பதவி வாங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் உலா வரும் இந்த நேரத்தில் இப்படி மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பேச்சுக்கள் அடிப்படுகின்றன.