தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை பார்வையிட சென்றார். அப்போது போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்டபட்டி கிராமத்திற்கு சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பதிலுக்கு அதிமுகவினரும் வாக்குவாதம் செய்ததால் ஒருவொருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது எம்.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இதில், அவரது கார் கண்ணாடி உடைந்தது. மேலும் அவருடன் சென்ற இரண்டு காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அதனைக் கண்ட அ.தி.மு.கவினர், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை துரத்தியடித்தனர். மேலும் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், நான் சென்ற கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் இந்த சம்பவத்திற்கும் தி.மு.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவினர் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் கிராமத்தை சேர்ந்தவர்களோ கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் அமமுகவினர் தான் என கூறுகின்றனர். தற்போது தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil