ops son : தேனி மாவட்டத்தில் போட்டியிட்டுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரின் பெயர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பொரிக்கப்பட்டிருந்த விவகாரத்தில் புகார் கொடுத்தால் விளக்கம் கேட்போம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செலவனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமன்னூர் அருகே அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பெருமாள் திருக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதனையொட்டி இங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில் கோயிலுக்கு உபயம் அளித்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனின் பெயர்கள் குடிப்பிடப்பட்டிருந்தது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொரிக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
எதிர்கட்சிகள் பலரும் இதனை கடுமையாக விமர்சித்து இருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே ரவீர்ந்திரநாத் குமார் தேனி எம்.பி. பொரிக்கப்பட்டிருந்தது இன்று காலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்று மதியமே அவசர அவசரமாக கல்வெட்டில் இருந்த ரவீர்ந்திரநாத் குமார் மறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதில் அளித்த அவர், “ குச்சனூர் கோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. என வைக்கப்பட்ட கல்வெட்டு தொடர்பாக முறையாக புகார் கொடுத்தால் விளக்கம் கேட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.