OPS speech at ADMK Christmas function: தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டு தேவாயலம் அருகில் இருந்த ஆதரவற்ற இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கிறிஸ்தவர்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது என்றும் கூறினார்.
பின்னர் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை சொன்னார். தொடர்ந்து பேசிய ஒபிஎஸ், தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே தவறு செய்தவர்களை ஏற்றுக் கொள்ளும்படி ஓபிஎஸ் வலியுறுத்தி பேசியது பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
சசிகலாவை மனதில் வைத்தே ஓபிஎஸ் இப்படி பேசியதாக கருதப்பட்ட நிலையில், அதிமுகவில் சசிகலாவுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஒபிஎஸ் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தவறு செய்தவர்கள் மனம் திருந்தினால் மன்னிக்கலாம் என்பது பாமரர்களுக்குதான் பொருந்தும். இது சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலாவுக்கு அதிமுகவில் மன்னிப்பு என்பதே கிடையாது. சசிகலா இல்லாத அதிமுக நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்புமே இல்லை. ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை சசிகலாவுக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.