மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பல பரபரப்பு வாக்குமூலங்களை அளித்துள்ளார்.
ஓபிஎஸ் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகத்தை தீர்க்கவே விசாரணை வேண்டும் எனவும் குரல் கொடுத்ததாக கூறினார்.
இந்நிலையில், அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிப்ரவரி 2017ல் மெரினாவில் தர்மயுத்தம் நடத்தியது போது பேசிய வீடியோ கிளிப்களை நெட்டிஸ்சன்கள் வைரலாக்கி வருகின்றனர். அப்போது, ஓபிஎஸூக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவைத்துவிட்டு, சசிகலாவை முதல்வராக்கும் பணிகள் நடைபெற்றன. அச்சமயத்தில், மெரினாவுக்கு இரவு புறப்பட்ட அவர், சுமார் 40 நிமிடங்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். ஜெ. மரணத்தில் விசாரணை தேவை என்று கோரிக்கை வைத்தார்.
அன்று அவர் பேசியதாவது, "ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி என் மனசாட்சியை சாந்தப்படுத்திக்கொள்ள இங்கு வந்தேன். இங்கு வந்தபோது சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன்.அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதன் விளைவாகத்தான் இங்கு வந்தேன்.
பொதுச்செயலாளராக கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனையும், முதலமைச்சராக என்னையும் பொறுப்பேற்க கூறினர். முதலமைச்சர் பொறுப்பை ஏற்க நான் மறுத்தேன். அம்மா இக்கட்டான நிலையில் இருந்தபோது, 2 முறை என்னை முதல்-அமைச்சர் பொறுப்பை வகிக்க கூறினார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த மனநிறைவே எனக்கு போதும், அதனால் இப்போது வேண்டாம் என்றேன்.
ஆனால் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்பவரை தான் முதல்-அமைச்சராக நியமிக்க முடியும். நீங்கள் பதவியேற்க முடியாது என்றால் பல்வேறு விமர்சனங்கள் எழும். கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்றனர். நானும் வேறு வழியில்லாமல் கட்சிக்கு நம்மால் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டேன்.
முதலமைச்சராக பொறுப்பேற்று 3 நாட்கள் இருக்கும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, திவாகர் ஒன்றை கேட்க சொன்னார், அக்காவை (சசிகலா) வீட்டுக்கு அழைத்து செல்லவா? என்று கேட்கிறார். அவருக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கவேண்டும் என்றார். நானும் மூத்த அமைச்சர்களை எனது வீட்டுக்கு அழைத்து கருத்து கேட்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டனர். அதன் பின்னர் சசிகலாவிடம் சென்று முடிவை கூறினோம். அதன்பிறகு தான் கடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.
அதிமுக எம்.எல்.ஏக்களால் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு என் பணியை செய்துகொண்டிருந்த நேரத்தில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சசிகலாதான் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டியளித்தார். நான் உடனே இந்த தகவலை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கொண்டு சென்றேன்.
இதெல்லாம் நீதி தானா? நியாயம் தானா? தர்மம் தானா? என கேட்டேன். இவ்வாறு அமைச்சர்கள் பேசினால் கவர்னர் சட்டமன்றத்தில் கட்சி பலத்தை நிரூபிக்க கூறினால் பிரச்சினைகள் வரும் என்றேன். அவரும் அமைச்சர்களை கண்டிப்பதாக கூறினார்
அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்த தகவலை என்னிடம் வந்து சொன்னவர், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தான். ஆனால் அவரே மதுரைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிரான கருத்தை தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதேபோல கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நான் போயஸ் கார்டனுக்கு சென்றேன்.
அங்கே மூத்த அமைச்சர்கள் இருந்தனர். சசிகலாவை முதலமைச்சராக அனைவரையும் ஏற்க செய்யவேண்டும் என்றனர். என்னை முதலமைச்சர் பொறுப்பை விட்டுத்தருமாறு கேட்டனர். நானும் 2 மணி நேரம் விவாதம் செய்தேன். யாரும் எதுவும் பேசவில்லை. கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். நான் அம்மா நினைவிடம் சென்று அவரது ஆன்மாவிடம் கேட்டுவருகிறேன் என்றேன். ஆனால் அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று என்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதின் பேரில், எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். இன்று அம்மாவின் ஆன்மாவிடம் சொல்வதற்காக நான் இங்கு வந்தேன்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.