அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சமீபத்தில் சொன்ன குட்டிக்கதையில் “நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு” என்று கூறியது சசிகலாவைதான் பற்றி கூறுகிறார் என்று விவாதங்கள் எழுந்ததால் அதிமுகவில் மீண்டும் சசிகலாவைப் பற்றி சர்சையைத் தொடங்கினார். ஓ.பி.எஸ் தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பேசி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் தனது இடத்தையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார். இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இருவரும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ‘ஏழைகளின் சிறிய சகோதரிகள்’ என்ற முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு குட்டிக்கதை சொன்னார். அப்போது அவர், “நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு. கடந்த கால செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்களை மன்னிப்போம்” என்று கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவை மீண்டும் சேர்ப்பது பற்றியதா என்ற விவாதங்கள் எழுந்ததால், அதிமுகவில் சலசலப்பும் சர்ச்சையும் எழுந்தது. இதனால், “தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு” என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து சசிகலாவுக்கு பொருந்துமா என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார், “ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துகள் சாமானியர்களுக்குப் பொருந்தும். சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலாவுக்கு எப்போதும் மன்னிப்பே கிடையாது.” என்று தெளிவுபடுத்தினார்.
சசிகலாவை தேவையற்ற தீய சக்தி என்றும், அவர் அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தவர் என்றும் கூறிய ஜெயக்குமார், சசிகலாவுக்கும் கட்சிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அதுபற்றி கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்று கூறினார். இதனால், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தபோது, அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஓ.பி.எஸ், “தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு” என்று அவர் பேசிய பேச்சுக்கள் மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி ஓ.பி.எஸ் சீரான இடைவெளியில் அவ்வப்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சசிகலாவை ஆதரிப்பதுபோல கருத்து தெரிவித்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவது ஏன் என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசுவதன் மூலம் அதிமுகவில் வலுவாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியைக் கொடுக்கிறார். இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தனது இடத்தை பலப்படுத்திக்கொள்கிறார். ஒ.பன்னீர்செல்வத்தின் கருத்தை அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்த்தாலும் கட்சியில் அவர்களின் இடத்தை தக்கவைத்துக்கொள்ள ஓ.பி.எஸ் இப்படி அவ்வப்போது பேச வேண்டும் என்றே கருதுகிறார்கள். ஓ.பி.எஸ்ஸின் இந்த நகர்வு அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாவவதைத் தடுக்கும்” என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.