ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜாரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சசிகலா ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த சதியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், சின்னம்மா சசிகலா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் நேற்று (மார்ச் 21) சசிகலாவின் உறவினர் இளவரசி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தியது. இளவரசி, ஓ.பி.எஸ் இருவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, அதிமுக ஓ.பன்னீர்செல்வம் இன்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் அளித்த வாக்குமூலம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஓ.பி.எஸ் வாக்குமூலத்தில் கூறியதாக வெளியான தகவல்கள்:
“ஜெயலலிதாவுக்கு என்ன நோய், எந்தெந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் யார் என்று தெரியாது. அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை மீது நம்பிக்கை உள்ளது” என்று ஓ.பி.எஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியானது.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா கூறியது குறித்து ஓ.பி.எஸ் தனது வாக்குமூலத்தில், ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, நான் அழுது கொண்டிருந்த போது, என்னிடம் அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். பன்னீர் சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என்று கூறினார். ஜெயலலிதா என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட சொன்னார். பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார்” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் சதி திட்டம் தீட்டவில்லை என்று ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா மரணத்தில், உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஓ.பி.எஸ் தனது வாக்குமூலத்தில், “ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்கள் கருத்து வலுத்ததால்தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும்” என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜரானபோது ஓ.பி.எஸ், “2016ம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்ததாக தெரிவித்ததாக வாக்குமூலம் வெளியான நிலையில், இன்று ஆஜரானபோது, டிசம்பர் 5ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படும் முன்பு பார்த்ததாக இன்று தெரிவித்துள்ளார்.
“திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான்இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்தார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொது வெளியில் எங்கும் பேசவில்லை. அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எவ்வித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.” என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இரண்டு நாட்களாக 9 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ஓ.பி.எஸ் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்று தகவல் வெளியானது.
ஆணையத்தில் விசாரணை முடிந்த பின், ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது: “ஜெயலலிதா மரணம் குறித்து அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும் இன்றும் ஆணையம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை நான் அளித்திருக்கிறேன். அதோடு, எதிர் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் உரிய பதிலையும் நேற்றும் இன்றும் காலையும் மாலையும் இரு தினங்களில் 4 நேரங்களில் நான் உரிய பதிலையும் உண்மையான பதிலையும் அளித்திருக்கிறேன்.
ஆணையம் அமைக்கப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரங்களை நான் இங்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். 7 தடவை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 6 முறை மட்டுமே கடிதம் வந்தது; 2 முறை மட்டுமே ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால், காரணத்தை ஆணையத்திடம் விளக்கினேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன், ஆணையத்தின் விசாரணை திருப்தியாக உள்ளது.
அம்மா (ஜெயலலிதா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் தொடர் சிகிச்சைக்கு பிறகு மரணம் அடைவதற்கு முன்பாக, எக்மோ கருவியை எடுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்று பார்த்துவரலாம் என்று சொன்னதற்கும் இடையில் நான் 74 நாட்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இதுதான் உண்மை. இதில் முரண்பாடான கருத்து இல்லை.” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
அப்போது, செய்தியாளர்கள் ஓ.பி.எஸ் இடம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய நீங்கள் என்று சசிகலா சதி எதையும் செய்யவில்லை என்று முரண்பாடாக கூறியுள்ளீர்களே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “பொதுமக்களுடைய கருத்தாக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சொல்லிதான் நான் முதன்முதலாக பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு சின்னமா (சசிகலா) அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் நிரூபித்தார்கள் என்றால் அவர்கள் மேல் இருக்கின்ற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லி இருக்கிறேன்.” என்று கூறினார்.
இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறீர்கள். ஆணையத்தில் உங்களிடம் சுமார் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். விசாரணை எப்படி போய்க்கொண்டிருக்கிறது. உண்மையாகவே இதில் இருந்து மர்மம் விலகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “என்னைப் பொருத்தவரை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் தந்திருக்கிறேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறேன். சில தெரியாத கேள்விகளைக் கேட்டார்கள். தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்திருக்கிறேன்.” என்று கூறினார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனைத்தையும் நான் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறேன் என்று ஓ.பி.எஸ் பதில் அளித்தார்.
ஆணையத்தின் விசாரணை எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா (சசிகலா) மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.