நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. படுதோல்வியை சந்தித்தது. சில இடங்களில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது. அ.தி.மு.கவினர் வெவ்வேறு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா என வெவ்வேறு அணிகளாக பிரிந்து சென்றனர். இதைதொடர்ந்து கட்சி தோல்வியையே சந்தித்து வருகிறது. இதனால் கட்சியில் குழப்பங்களும், சலசலப்பும் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு மத்தியில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தது. தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க முறிவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ், டி.டி.வி அணி பா.ஜ.கவுடன் இணைந்தும், இ.பி.எஸ் அணி தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்தும் தேர்தலை சந்தித்தன. இருப்பினும் 2 கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதத்தில் வேறுபட்டன.
இந்நிலையில், நேற்று சசிகலா வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.கவினர் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று (ஜுன் 6) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திவிட்டுப் போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" என அதில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“