scorecardresearch

அ.தி.மு.க தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு; ஐகோர்ட்டில் இன்று அவசர விசாரணை

அ.தி.மு.க தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, விடுமுறை தினமான இன்று (மார்ச் 19) அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்

Madras-HC-3
சென்னை உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 19) அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்தன. இறுதியாக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு

இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்னர் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இன்று மாலை 3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த உடனேயே, எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.

இந்தநிலையில், அ.தி.மு.க தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை, விடுமுறை தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops supporter files case against admk election hearing sunday with special permission