அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே இ.பி.எஸ்.,க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இதையும் படியுங்கள்: ‘எல்லாக் கட்சியும் இருக்கட்டும்; பா.ஜ.க கொடிக் கம்பம் மட்டும் வேணாம்’: குமுறும் கோவை கிராமம்
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு, அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.
இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்குவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே இ.பி.எஸ்.,க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil