ஓ.பி.எஸ்-ன் நிலைப்பாடு தான் நியாயமானது என தொண்டர்கள் அறிந்துள்ளனர். ஒற்றுமையாக இருந்த அ.தி.மு.க.,வை துண்டாக்கியவர் ஜெயக்குமார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் நமது அம்மா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதையும் படியுங்கள்: புத்தாண்டு பைக் ரேஸ்… தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை
அப்போது, அ.தி.மு.க பிளவால் தி.மு.க தேர்தலில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். அ.தி.மு.க தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும்.
ஓ.பி.எஸ் ஒற்றுமைக்கு கூக்குரல் விடுத்தார். மனசாட்சி உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ்-ன் நிலைபாடுதான் நியாயமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பலரும் எடப்பாடியை விட்டு விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதற்காகவே அவசரக் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பட்டுவாடா செய்தார். அப்படி கொடுக்கப்பட்ட பணத்தில் தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்-ஐ அரசியல் போலி என்றால், அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் ஓ.பி.எஸ்-ஐ பற்றி பேச தகுதியில்லை. அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கிறார் ஜெயக்குமார். ஒற்றுமையாக இருந்த அ.தி.மு.க.,வை துண்டாக்கியவர் ஜெயக்குமார்.
மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம். இவ்வாறு மருது அழகுராஜ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil