அ.தி.மு.க. தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கைக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளின் பட்டியலை அ.தி.மு.க அதிகாரப்பூர்வ நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.
இதையும் படியுங்கள்: மோடி பேசியதை உதயநிதி ஹிந்தி பண்டிட் வைத்து தெரிந்துக் கொள்ளட்டும் – வானதி சீனிவாசன்
இந்தநிலையில், அ.தி.மு.க. தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதில் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புதிய நிர்வாகிகள் நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு இறுதியாக இல்லை. எனவே அ.தி.மு.க தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிகவும் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புகழேந்தி அந்த மனுவில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil