கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. ஆட்சியில் இருந்த பா.ஜ.க 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.கவும் வேட்பாளர்களை அறிவித்தது.
தமிழர்கள் அதிகம் வாழும் 3 தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளர்களை அறிவித்தது. இது தொடர்பாக, ஓ.பி.எஸ் அணியினர் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியின் சில வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், இ.பி.எஸ் வேட்பாளர்களை திரும்ப பெறும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வகையில்
இ.பி.எஸ் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். பா.ஜ.க அந்த தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிவில் பா.ஜ.க புலிக்கேசி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தொகுதிகளில் தோல்வியடைந்தது. அதில் புலிக்கேசியில் பா.ஜ.கவிற்கு இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, கர்நாடகாவில் நடந்தது தவறானது. அனுபவித்து விட்டோம். கே.ஜி.எஃப், காந்தி நகர் தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிட எடியூரப்பா சம்மதம் தெரிவித்தார். ஆனால் அண்ணாமலை சீட் கொடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் எதுக்கு 20 இடங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு ஏன் 20 இடங்கள் வழங்க வேண்டும். 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த அண்ணாமலையிடம் ஆள் உள்ளனரா? அண்ணாமலை தன் நிலையறிந்து பேச வேண்டும். ஜெயலலிதா அம்மா வளர்த்த மாநிலத்தில் அ.தி.மு.கவிற்கு 2-3 தொகுதிகள் வழங்க முடியவில்லை. அதனால் தான் கர்நாடகாவில் பா.ஜ.கவிற்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“