அ.தி.மு.கவில் ஒன்றைத் தலைமை விவகாரம் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் வெடித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தை நாடி சட்டப்போரட்டம் நடத்தினர். பொதுக்குழு முடிவை எதிர்த்து, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும் என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து இ,பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழக்கியது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று (பிப்ரவரி 23) வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கி, ஓ.பி.எஸ்ஸின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்புக்குப் பின் ஓ.பி.எஸ் ஆதரவாளர் கண்ணன் கூறுகையில், "இனிமேல் தான் அரசியல் அத்தியாயம் ஆரம்பம் ஆகப்போகிறது. உச்ச நீதிமன்றத்திற்கு மேலாக இருக்கிறவர்கள் மக்கள். அவர்களிடம் செல்வோம். அதற்கான களத்தை தயார் செய்து வருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெற்றி, தோல்வியை தீர்மானிக்காது. கடந்த காலத்தில் தி.மு.கவில் இருந்து எப்படி எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டாரோ அதேதான் இப்போது நடந்துள்ளது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். மக்களைச் சந்திப்போம். அரசியல் அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தால் மக்களை நோக்கி பயணிப்போம்.
தனிக்கட்சியா, அடுத்த பயணம் எப்படி? மக்களைச் சந்திக்கும் வியூகம் எப்படி என்பதை ஒருங்கிணைப்பாளருடன் பேசி முடிவு எடுப்போம். அதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது என்றால் அதை செய்வோம். மக்களைச் சந்திப்போம்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/