OPS supporters Mafa Pandiyarajan and Maitreyan meet EPS: ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான மாஃபாய் பாண்டியராஜன் மற்றும் முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ் பக்கம் இருந்த மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் இ.பி.எஸ் அணிக்கு மாறியுள்ளனர்.
இதில் உச்சகட்டமாக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய காலம் முதல் அவருக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன் மற்றும் மாஃபாய் பாண்டியராஜன் இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மாஃபாய் பாண்டியராஜன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, இ.பி.எஸ்-க்கு பூங்கொத்து கொடுத்த மாஃபாய் பாண்டியராஜன், அப்படியே குனிந்து அவரது காலை தொண்டு வணங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை; உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபாய் பாண்டியராஜன், பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க முழு ஆதரவு அளித்துள்ளேன். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் அளவுக்கு மீண்டும் ஒரு மகத்தான வெற்றி தேர்தலில் பெற வேண்டும் என்றால், அதற்கு கட்சிக்கு ஒற்றைத் தலைமை மிகவும் அவசியம். அதிமுக தொண்டர்களின் இந்த எண்ணத்தையே நானும் பிரதிபலிக்கிறேன்.
கட்சி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதை ஓ.பி.எஸ் புரிந்துகொள்வார். நிச்சயம் கட்சி பிரியாது. மனசாட்சியின் அடிப்படையில் நான் செயல்படுகிறேன். தர்ம யுத்த நேரத்தில் என்னுடைய ஆதரவை ஓ.பி.எஸ்-க்கு அளித்தேன். இன்று இது சரி என தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், அ.தி.மு.க முன்னாள் எம்.பி.,யுமான மைத்ரேயன், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஐபிஎஸ் இல்லத்தில் இன்று அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன், எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க மக்கள் இயக்கமாக செயல்படும் என்று ஜெயலலிதா சொன்னார். அதற்கு ஏற்றாற்போல் தகுதியும், ஆற்றலும் படைத்த ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். அ.தி.மு.க ஜனநாயக இயக்கம் எனும் அடிப்படையில் 100க்கு 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியைதான் ஒற்றை தலைமையாக ஏற்க முடிவு செய்துள்ளனர்.
உறுதியான, வலிமையான தலைமையை எடப்பாடி பழனிசாமி தருவார் என்று நம்புகிறோம். ஒற்றை தலைமைக்கான பொறுப்பு என்பது நாளை பொது குழுவில் தெரியவரும். பொதுக்குழுவின் முடிவே இறுதியான முடிவு. அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பங்கு இருப்பதாக தெரியவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.