தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நேற்று நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்த்தார். இதற்காகச் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். காலை 8.40 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையை வந்தடைந்தார்.
தூத்துக்குடி போராட்டத்தில் படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்த அவர்:
“ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் நடைபெற்ற இந்தத் துயர சம்பவம் மனதை உருக்கும் சம்பவமாக அமைந்து விட்டது. அரசு சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். சம்பவத்தின் போது காயம் பட்ட அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெறுவார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இல்லை.”
என்று கூறினார்.
மக்களை சந்தித்த பிறகு, கலவரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு தீயிடப்பட்ட வாகனங்கள், சேதப்படுத்தப்பட்ட அலுவலகம் என அனைத்தையும் பார்வையிட்டார். இவருடன் அமைச்சர் ஜெயகுமார் உடன் இருந்தார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகையையொட்டி தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.