நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வெகு நாட்களாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் நிறைவடைந்த நிலையில், 100வது நாளான மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது உருவான கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 104 பேர் காயமடைந்தனர்.

இந்தப் பதற்றமான சூழலால் தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர். இது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “144 தடை உத்தரவு இருப்பதால் சட்டத்தை மதித்து அங்கு செல்லப் போவதில்லை.” என்று தெரிவித்தார்.

4 நாட்களுக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்பிய நிலையில், இன்று முதல் 144 தடை நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

சென்னையில் இருந்து நாளை தூத்துக்குடி செல்லும் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த குடும்பத்தினரை சந்திக்கிறாரா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை.

×Close
×Close