அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம், தீபாவளியை முன்னிட்டு போடிநகர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளுக்கு டுவீலரில் சென்று வாழ்த்து தெரிவித்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் சொந்த ஊரில் ஸ்கோர் செய்து வருகிறார்.
மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் அணி சேர்ந்ததில் இருந்து கட்சியில் உறுதியான பிடியைக் கொண்டிருந்தாலும் அவரால் 2வது இறுக்கையையே பெற முடிந்திருக்கிறது. இதனால், அதிமுகவில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே எப்போதும் ஒரு பணிப்போர் இருந்துகொண்டே இருப்பதான தோற்றம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசப்படுகிறது. இதற்கு காரணம், அதிமுகவில் ஓ.பி.எஸ்ஸின் செல்வாக்கு எடுபடவில்லை என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில்தான், ஓ.பி.எஸ், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்-ஸின் கருத்துக்கு அதிமுகவில் வெளிப்பட்ட ஆதரவும் எதிர்ப்பும் ஈ.பி.எஸ்-ஸின் பலவீனத்தையும் சேர்த்தே வெளிப்படுத்தியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பரப்பான அரசியல்வாதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் மனைவி விஜயலட்சுமி 2 மாதங்களுகு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மனைவியின் மறைவைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் கடந்த 60 நாட்களாக சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
போடி 20வது வார்டு செயலாளர் வீரக்குமார், 26 வார்டு செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் இல்ல விழாக்கள் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், ஓ.பி.எஸ் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்த சூழலில்தான், ஓ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளுக்கு டுவீலரில் சென்று சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்துக்ளைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தனது சொந்த தொகுதியான போடியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் வீடு தேடி கார், தொண்டர் படை பரிவாரங்களுடன் செல்வார் என்று எதிர்பார்த்தால், ஓ.பி.எஸ் மிகவும் எளிமையாக தொண்டர் ஒருவரின் டுவீலரில் ஆரவாரமில்லாமல் தனியாக குறுகிய தெருக்களில் பயணம் செய்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஸின் பிடி தளர்வதாக விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக, டூவீலரில் தொண்டர்களை வீடு தேடி சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து சொந்த ஊரில் ஸ்கோர் செய்து வருகிறார். ஓ.பி.எஸ் அதிமுக தொண்டர் ஒருவரின் டூவிலரில் பயணம் செய்யும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”